Friday, October 15, 2010

பேசலாமா?

சில சமயங்களில் நான் ரொம்ப அதிகமாக பேசுகிறேனோ என்று தோன்றும். ஏதோ என் மனதில் இருப்பதை எல்லாம், என் எண்ணங்களை எல்லாம், எனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிவிடவேண்டும் போல ஒரு வேகம், என் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை சிரிக்கவைக்க வேண்டும், மற்றவர்களுக்கு என்னை புரியவைக்க வேண்டும் என்று ஒரு உத்வேகம் இருக்கிறது. நிசப்தத்தின் கனம் அழுத்துவது போல அதை கலைத்து சிதறடித்துவிட வேண்டும் போல தோன்றுகிறது.

ஆனால் அப்படி வாய் ஓயாமல் பேசியபின் என் பேச்சின் சப்தமே எனக்கு அலுப்புத்தட்டி விடுகிறது. ஏன் அப்படி பேசுகிறேன் என்று எனக்குள் கேள்வி எழுகிறது.

பல நேரங்களில் நான் சுவாரஸ்யமாக பேசினேன் சிரிக்க சிரிக்க பேசினேன் என்று எனக்கே தோன்றினாலும் சில சமயங்களில் அதிகமாக பேசிவிடுகிறேனோ
அடக்கமுடியாமல் ஒரு கட்டுப்பாடில்லாமல் பேசிவிடுகிறேனோ என்றும் தோன்றுகிறது.

அன்று விஜய் டிவியில் வேளுக்குடி கிருஷ்ணன் எப்பொழுதெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னார். இதோ அந்த லிஸ்ட் -

1. தெரியாத விஷயத்தை பற்றி பேசவே கூடாது
2. தெரிந்ததையும் சம்பந்தம் இல்லாத இடத்தில் பேசக்கூடாது
3. உங்கள் அபிப்ராயத்தை கேட்காத போது பேசக்கூடாது
4. ஒருவர் பேசிகொண்டிருக்கும் பொது குறுக்கே பேசக்கூடாது
5. முடிவை முன்பே தீர்மானித்துக்கொண்டு 'இது தான் சரி' என்று அடித்து பேசக்கூடாது
6. பெரியவர்கள் பேசிகொண்டிருக்கும் போது சிறியவர்கள் குறுக்கே பேசக்கூடாது
7. பேசவந்த விஷயத்தை தவிர அனாவசியமாக மற்றதைஎல்லாம் சேர்த்து பேசக்கூடாது
8. ரகசியத்தை வெளியிடும் விதத்தில் பேசக்கூடாது
9. மற்றவர்கள் சொல்வதை கவனித்து புரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது
10. எனக்கு எல்லாமே தெரியும் என்று காட்டிக்கொள்ளும் மமதையில் எதை பற்றியும் பேசக்கூடாது
ஆனால் -
11. பேசவேண்டிய சமயத்தில் பேசாமலும் இருக்கக்கூடாது

நினைவில் வைத்துகொள்வது சுலபம். கடைபிடிக்கத்தான் நிறைய கவனம் வேண்டும், பயிற்சி வேண்டும். Will definitely work at it.

No comments:

Post a Comment