Thursday, June 10, 2010

வரம் தா இறைவா

வரம் தா இறைவா

காலை என்னை எழுப்பும் அலார கடிகாரமாய் பறவைகள் ஒருசேர எழுப்பும் கீதங்கள்

எழுந்ததும் பலகணி கதவை திறக்கையில் என்னை ஸ்பரிசிக்கும் காற்று

கடவுள் முன் ஏற்றிய குத்துவிளக்கின் முத்துப்போன்ற சுடர்

அமர்ந்து தியானிக்கும் போது ஏற்படும் அமைதி

வீரியத்தை கட்டுப்படுத்த போல சுற்றி வட்டமிட்ட இளம் காலை சூரியன்

எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் ஜாதி மல்லிகை அல்லது பாரிஜாதப்பூ வாசம்

எதேச்சையாய் சில நேரங்களில் கண்ணில் படும் கிளி அல்லது மீன்கொத்தி பறவை

வாலை மேலே தூக்கிக்கொண்டு ஏதோ சொல்ல வருவது போல கிட்ட வந்து நின்று பார்த்துவிட்டு திரும்பிப்போகும் அணில்

வாசலில் பளிச்சென்று கச்சிதமாக அமைந்த அன்றைய சிறு கோலம்

தட்டில் அலங்கரித்து கடவுள் முன் வைத்த அன்று குவளை போல மலர்ந்த சிவந்த குல்மோகர் பூக்கள்

வாத்சல்யமும் அன்பும் கனிவும் குழைத்து கலந்த கன்றுக்குட்டியின் கண்கள்

எல்லாவிதமான சுமுகமான உறவுமுறைகளிலும் வெளிப்படும் அன்யோன்யம்

சுட்டெரிக்கும் வெய்யிலில் காற்று வீச சல சலக்கும் அரசமரத்து இலைகள்

சுருள் சுருளாய் கொத்துக்கொத்தாய் இலைகளுடன் பறந்து விரிந்து நிழல் தர நிற்கும் வேப்ப மரம்

எங்கும் நீலமாய் அல்லது சிறு சிறு பஞ்சுப்பொதி போன்ற மேக கூட்டமுடன் அல்லது மழை பொழிய தயாராகும் கருத்த மேகங்களுடனான வானம்

ஆரஞ்சு வண்ணத்தில் பார்த்துகொண்டே இருக்கத்தூண்டும் மெதுவாய் கீழ்வானத்தில் அஸ்தமிக்கும் சூரியன்

கூட்டம் கூட்டமாக வீடு நோக்கி பறந்து செல்லும் மாலை நேரத்து பறவைகள்

இரவில் மொட்டை மாடியில் மல்லாந்து படுக்கையில் தெரியும் தினம் தினம் உருமாரி வரும் நிலா

ஒரே சீராக அழகாக, கவிதையாய் ஒருமித்து செல்லும் என் சிந்தனை

இவைகளை பார்த்து, ரசித்து, உணரும்போது நான் அனுபவிக்கும் இன்பம், ஆனந்தம், உவகை, உத்வேகம் இவை எல்லாம் என்னுள்ளிலிருந்து தான் வந்தது என்பதை மறவாதிருக்க வரம் தா இறைவா.

No comments:

Post a Comment